Friday, December 23, 2011

அதிகாரம் 078 : படைச் செருக்கு [படையின் பெருமை]

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். [78:04]


விளக்கக் குறள் :

கைவேலால் யானையைக் கொன்றபின்பும் காத்திருப்பான்
மார்தைத்த வேலைப் பறித்து

கையிருந்த வேல்யானை வீழ்த்த; தொடரத்தன்
மார்தைத்த வேல்பறிப் பான்

Tuesday, December 20, 2011

அதிகாரம் 012 : நடுவு நிலைமை [ பொதுத் தன்மை ]

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி [12:08]


விளக்கக் குறள் :
ஒருபக்கம் சாயாத் தராசின்முள் போல
இருப்பது சான்றோர்க்(கு) அழகு

தராசின் நியாயமுள் போல்நடுவில் சாயாமல்
நிற்பது சான்றோர்க்(கு) அழகு


படவிளக்கம் :

நடைமுறையில் நடு நிலையைக் காப்பாற்றும் சான்றோர் நிலைமை

Saturday, December 17, 2011

அதிகாரம் 055 : செங்கோன்மை [ அரச நீதி ]

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில் [55:09]

விளக்கக் குறள் :

மக்களைக் காப்பதும் குற்றம் அழிப்பதும்

மன்னன் கடமையா கும்

ஒரு முன்னோட்டம் :
இரு துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடப்பது 'ஈ'

கொண்ட குறிக்கோளில் வெறியாய் இருப்பவரால மட்டுமே ..எளிதில் பறந்து விடும் ஒரு சிறு ஈயையும் குறிவைத்து இருதுண்டுகளாய் /சரிசமமாய் வெட்டமுடியும் ... அவன்தான் வித்தையில் தேர்ந்த மன்னனாக இருக்கமுடியும்

பட விளக்கம் :
மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் எதையும் (அது ஈயாக இருந்தாலும்) கொன்றொழித்து மக்களைக் காப்பது மன்னன் கடமையாகும்

...சரியாச் சொல்லி இருக்கேனா ?

Sunday, December 11, 2011

அதிகாரம் :5 இல்வாழ்க்கை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் [05:10]

விளக்கக் குறள் :

மண்ணுலகில் நன்நெறியில் வாழ்வோரை; விண்ணுலகத்

தெய்வமாய்ப் போற்றிமதிப் பார்

Thursday, December 8, 2011

அதிகாரம் 111 : புணர்ச்சி மகிழ்தல் [ கூடல் இன்பம் ]

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு. [111:08]

விளக்கக் குறள் :

காற்றும் இடைபுகா வண்ணம் தழுவுவது

காதலருக்(கு) என்றும் இனிது

Tuesday, December 6, 2011

அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற [07:01]

விளக்கக் குறள் :

பெறத்தகுந்த பேற்றில் அறிவுடைய மக்கள்போல்

மற்றெதுவும் நாம்அறி யோம்


Sunday, December 4, 2011

அதிகாரம் 047 : தெரிந்து செயல்வகை [ஆராய்ந்து செயல்முடித்தல்]

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல் [47:02]

விளக்கக் குறள் :

செயல்தெரிந்தார் கூடி செயல்ஆய்ந்து செய்வாருக்(கு)

ஆகா செயலொன்றும் இல்


அதிகாரம் 091 : பெண்வழிச் சேறல் [ பெண் பித்தராதல் ]

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து. [91:07]

விளக்கக் குறள் :

பெண்ணேவல் செய்துநிற்கும் ஆண்மையிலும்; நாணம்கொள்

பெண்மையே என்றும் சிறப்பு


Saturday, December 3, 2011

அதிகாரம் 093 : கள் உண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார். [93:01]

விளக்கக் குறள் :

புகழ்விலகும்; கொண்ட பகையும் இகழும்

மதுவின்மேல் காதலுற்றோ ரை


படவிளக்கம் :

வரிசையாய் வருபவர்களின் ஒழுங்கு... மதுக்கோப்பையைக் கடந்தவுடன் கலைகிறது...வரிசை குலைகிறது

Thursday, December 1, 2011

அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு :..

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின் [07:02]

விளக்கக் குறள் :

பழியில்லாப் பண்புடைய மக்களைப் பெற்றால்

எழுபிறப்பும் அண்டாது தீது

Wednesday, November 30, 2011

அதிகாரம் 114 : நாணுத் துறவுரைத்தல் [ நாணம் மீறுவதைக் கூறல் ]

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து [114:02]

1)

நான்எனது உள்ளம் அழுக்காக; ’நாள்நோக்கி’

நாணம் தொலைத்தேன் துணிந்து2)அழுக்கடைந்த(து) உள்ளம் உடம்பு; தொழுகிறேன்

நானும்என் நாணம் தொலைத்து


3)

அழுக்கடைந்த(து) உள்ளம் உடம்பு; மடலேற

நாணம் தொலைத்தேன் துணிந்து

Tuesday, November 29, 2011

அதிகாரம் 088 : பகைத்திறன் தெரிதல்


வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு. [88:08]


விளக்கக் குறள் :

வழியறிந்து தன்வலியால் தற்காப்போர் முன்னால்

அழியும் பகையின் திமிர்

Sunday, November 27, 2011

அதிகாரம் 010 : இனியவை கூறல்

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்(து) அற்று [10:10]

விளக்கக் குறள் :

இன்சொல் விடுத்துக் கடும்சொல்லால் சாடல்;

கனிதவிர்த்துக் காய்சுவைத்தாற் போன்று ...........(அ)


கூடுதல் விளக்கம் :)

இனிமேல் எதனால் கலகம்; அதனால்
இனிமையாய்ப் பேசிப் பழகு ................................(ஆ)


Thursday, November 24, 2011

அதிகாரம் 111 : புணர்ச்சி மகிழ்தல் [ கூடல் இன்பம் ]

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள். [111:06]

விளக்கக் குறள் :

தழுவும் பொழுதெல்லாம் புத்துயிர் தந்திடும்;

நல்லமுதாம் என்னவள் தோள்


Monday, November 21, 2011

அதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை. [04:06]

விளக்கக் குறள் :

இயன்ற வரைஅன்றே செய்அறம்; நிற்கும்

உயிர்நீத்த பின்பும் புகழ் .(அ)


அயர்வின்றி அன்றே அறம்செய்; அதுவே

உயிர்நீக்கும் காலத் துணை .(ஆ)


Friday, November 18, 2011

அதிகாரம் : 131: புலவி [ காதலரின் ஊடல் ]

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது. .[131:01]

விளக்கக் குறள் :

தழுவா(து) இருஅவரை நீயும்; அவர்பெறும்

அல்லல்நோய் காண்போம் சிறிது

Thursday, November 17, 2011

அதிகாரம் 045 : பெரியாரைத் துணைகோடல்[பெரியாரின் துணையைக் கொள்]


அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல் [45:01]


விளக்கக் குறள் :

அறமுணர்ந்த மூதறிஞர் நட்பை; அடையும்

முறையறிந்து சேர்தல் சிறப்பு


Thursday, November 3, 2011

அதிகாரம் 022 : ஒப்புரவு அறிதல் [ பொதுநலம் நாடல் ]

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு [22:05]

விளக்கக் குறள் :

பேரறிவா ளன்செல்வம்; தாகம் தணிக்கநல்

நீர்தரும் ஊருணியை போன்று


Friday, October 28, 2011

அதிகாரம் :15 பிறன்இல் விழையாமை


எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி [15:05]


விளக்கக் குறள் :

எளியதென்(று) எண்ணிப் பிறன்இல் நுழைவோர்;

அழியாப் பழியடை வார்


பட விளக்கம் :
:)

Wednesday, October 26, 2011

அதிகாரம் 110 : குறிப்பறிதல்


நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர். [110:03]


விளக்கக் குறள் :

பார்த்தாள்;நான் பார்த்ததும் நாணித் தலைகுனிந்து

வார்த்தாள்;எம் காதலுக்கு நீர்

Saturday, October 22, 2011

அதிகாரம் 067 : வினைத் திட்பம் [ செயல் வலிமை ]துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை [67:09]

விளக்கக் குறள் :

துன்பமென் றாலும் விடாது தொடர்ந்தாருக்(கு)

இன்பம் தரும்அச் செயல்


இன்பம் தரும்செயல் என்பதெல்லாம் துன்பம்

விதைத்த நிகழ்வின் நிறைவு


பட விளக்கம் : வேண்டுமோ :)

Friday, October 21, 2011

அதிகாரம் 068 : வினைச் செயல்வகை [செயல் வகைகள் ]


சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது [68:01]


விளக்கக் குறள் :

செயல்தன்மை ஆய்ந்து முடிவெடுத்த பின்பும்

செயல்படுத்தத் தாமதித்தல் தீது

அதிகாரம் 031 : வெகுளாமை[சினம் கொள்ளாமை]


செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற [31:02]


விளக்கக் குறள் :

வலியோர்முன் கொள்கோபம் தீது; எளியோர்முன்

கொள்கோபம் முன்னிலும் தீது


படவிளக்கம் :

ஐயன் சொன்ன கோணம் இதுவல்ல ..உன்னிலும் எளியவரிடம் கோபம் கொள்ளாதே ..அது தீயது என்றார் ..

ஆனால் அவர்சொல் கேளாமல் கோபப்பட்டு... இதுபோல ஒன்று நிகழ்ந்துவிட்டால் ..

கோபப்பட்டவரின் வாழ்வில்.....அதைவிடக் கேவலமான ஒன்று இருக்கப்போவதில்லை ...:)

எனவே கவனம் :))

Sunday, October 16, 2011

அதிகாரம் 110 : குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. [110:01]


விளக்கக் குறள் :

1)

மையுண்ட கண்ணின் ஒருபார்வை நோய்தரும்;

மற்றதந்த நோய்க்கு மருந்து

2)

சீர்கெடுக்கும் மையிட்ட கண்ஒன்று: சீக்கெடுத்துச்

சீராக்கும் மற்றது வந்து

அதிகாரம் 102 : நாணுடைமை


பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்

அறம்நாணத் தக்கது உடைத்து. [102:08]


விளக்கக் குறள் :

நாணும் செயலுக்கு நாணா(து) இருப்போரை

நீங்கும் அறம்நாணம் கொண்டு

Wednesday, October 12, 2011

அதிகாரம் 126 : நிறையழிதல் [ மனம் குலைதல் ]


காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு. [126:01]


விளக்கக் குறள் :

காமமென்னும் ஆயுதத்தால் வீழும்; பெருமைஎன்னும்

நாணத்தாழ் போட்ட கதவு


படவிளக்கம் :
பொங்கும் காமம் எனது வெட்கத்தை அழிக்க ...பெருமை குலையும் வகையில் ....எல்லாரும் அறியும் பொருட்டு.... ’யாரும் இடைஞ்சல் செய்யாதீர்கள்’ என்று பொதுவில் அறிவித்து , வேறு யாரும் அழைத்தாலும்,வேறெதற்கும் நான் தயாரில்லை (காது அடைக்கப்பட்டிருக்கிறது ), என முடிவெடுத்து , உள்ளே காத்திருக்கிறேன் நான் :)

Tuesday, October 11, 2011

அதிகாரம் 084 : பேதைமை [ அறியாமை ]


ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல். [84:04]


விளக்கக் குறள் :

கற்றும் உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்; கற்றவழி

செல்லாதார் மூடருக்கும் மேல்

Monday, October 10, 2011

அதிகாரம் 052 : தெரிந்து வினையாடல் [ தெரிந்து செயல்புரிதல்]
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரியன் ஆகச் செயல் [52:08]


விளக்கக் குறள் :

செயல்முடிக்கும் ஆற்றல் அறிந்து; செயல்தொடங்கச்

செய்துவிடல் சேர்க்கும் சிறப்பு

Saturday, October 8, 2011

அதிகாரம் 110 : குறிப்பறிதல்


கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண். [109:06]விளக்கக் குறள் :

சினத்தால் அவள்புருவம் கோணாமல் நின்றிருந்தால்

நான்நடுங்கும் துன்பம்வா ராது


அவள்கண் = அவளிடம் என்ற பொருளில் மேலே விளக்கம் தந்திருந்தேன்..
கண்ணை கண்ணாக வைத்தே ஒரு விளக்கம்


வளையா(து) அவள்புருவம் கண்மறைத்து நின்றால்
விளையா(து) எனக்குள் பயம்

அதிகாரம் 045 : பெரியாரைத் துணைகோடல்[பெரியாரின் துணையைக் கொள்]


01-10 11 : முதியோர் தினம் : மூத்தோரைப் போற்றும் உறுதி எடுப்போம்

அதிகாரம் 045 : பெரியாரைத் துணைகோடல்[பெரியாரின் துணையைக் கொள்]

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல் [45:03]


விளக்கக் குறள் :

பெரியோரைப் போற்றி உறவாக்கிக் கொள்ளல்

அரியவற்றுள் எல்லாம் அரிது

Tuesday, October 4, 2011

அதிகாரம் 040 : கல்வி


கலைமகளுக்கு சமர்ப்பணம் :கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக [40:01]


விளக்கக் குறள் :

கற்க குறையின்றி நல்மொழியை; கற்றபின்

அவ்வழியில் காக்க நெறி


படவிளக்கம் :

படிப்பதனால் கிடைக்கும் பறவைப் பார்வையால் ...
உலகை எளிதாய் பார்க்கலாம்....
நல்வழியை நன்றாய் காக்கலாம்

Monday, October 3, 2011

அதிகாரம் 011 : செய்ந்நன்றியறிதல்


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது [11:02]விளக்கக் குறள் :

சரியான நேரத்தில் செய்யும் சிறுஉதவி;

இவ்வுலகைத் தாண்டிப் பெரிது


சமயத்தில் செய்யுதவி சின்னஞ் சிறிதெனினும்

பேருலகைக் காட்டிலும் மேல்


படவிளக்கம் :
இங்கே உதவுபவர் ஒரு மாற்றுத் திறனாளி ..
இவரது செயல் , ஐயனே நினைத்திராத புதிய கோணமாக இருக்க வாய்ப்புண்டு ...

Sunday, October 2, 2011

அதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்


காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று. [112:04]


விளக்கக் குறள் :

பார்க்கும் குவளை; கவிழ்ந்தே நிலம்நோக்கும்

பாவைகண்ணுக்(கு) ஈடில்லை என்று


படவிளக்கம் :வெட்கப்படுகிறது மலர் மனதுக்குள் ...

( இது குவளை மலர் அல்ல )

அதிகாரம் 064 : அமைச்சு


மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை [64:06]


விளக்கக் குறள் :

நுண்மதியும் கற்றறிந்த தன்மதியும் கொண்டோர்முன்

வஞ்சகம் நிற்கமுடி யாது


விதிநுட்பம் கொண்டமதி நுட்பத்தைச் சூழும்

அதிநுட்பம் இல்லையாம் இங்கு

அதிகாரம் 048 : வலியறிதல் [வலிமை அறிதல்]


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும் [48:06]


விளக்கக் குறள் :

நுனிமரம் நோக்கித் தொடரும் முடிவு;

உயிருக்குச் சேர்க்கும் அழிவு


கிளைநுனி ஏறியபின் மேலும் தொடர்ந்தால்

தலைக்குத் தொடராது வாழ்வு

அதிகாரம் 029 : கள்ளாமை [ களவு செய்யாமை]


அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் [29:05]


விளக்கக் குறள் :

பொருள்கவர எண்ணி பிறர்தளரக் காப்போர்;

அருள்மீது பற்றற்ற வர்


படவிளக்கம் : தேவை இருக்காது என நினைக்கிறேன்அதிகாரம் 8 : அன்புடைமை

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு [08:04]விளக்கக் குறள் :
பிறரின்மேல் ஆர்வம் உருவாக்கி நட்பென்னும்
நற்சிறப்பும் உண்டாக்கும் அன்பு

அதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். [04:03]விளக்கக் குறள் :
செய்யும் அறச்செயல் ஏதெனினும்; நல்வழியில்
தொய்வின்றிச் செய்வாய் தொடர்ந்து

Monday, September 19, 2011

அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் [01:02]விளக்கக் குறள் :
கற்றும் இறைவன் அடித்தொழார்; எல்லாம்
அறிந்தும் அறியா தவர் (அ)
அறிவுவடி(வு) ஆண்டவன் பாதம் தொழாதவர்
கற்றதால் இல்லை பயன் (ஆ)

படம் பற்றிய குறிப்பு : ’அந்த கற்றவர்’ நிற்கும் இடம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று

Friday, September 16, 2011

அதிகாரம் :5 இல்வாழ்க்கை


பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் [05:04]

விளக்கக் குறள் :
பழிக்(கு)அஞ்சி கூடிப் பகுத்துண்பார் வாழ்வில்
ஒழுக்கத்திற்(கு) இல்லை குறை

Tuesday, September 13, 2011

அதிகாரம் 8 : அன்புடைமை

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு [08:05]
விளக்கக் குறள் :
இன்புற்றார் வாழ்வின் சிறப்புக்கு வாய்ப்பெல்லாம்
அன்புள்ளம் கொண்டு வரும்

அன்பான உள்ளத்தால் வாய்க்கும்; உலகத்தில்
இன்புற்றார் வாழ்வில் சிறப்பு

Monday, September 12, 2011

அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் [07:06]விளக்கக் குறள் :
குழல்யாழ் இனிதாம்; குழந்தை பிதற்றும்
மழலைச்சொல் கேளா தவர்க்கு (அ)
குழலோசை யாழிசை என்றும் இனிதாம்
மழலைச்சொல் கேளாத வர்க்கு (ஆ)

Thursday, September 8, 2011

அதிகாரம் 06: வாழ்க்கைத்துணை நலம்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை [06:05]
விளக்கக் குறள் :
கணவனை மட்டுமே தெய்வமாய்ப் போற்றுபவள்;
வாழவைக்கும் வான்மழைப் போன்று

படக்குறிப்பு : நடுவில் இருக்கும் அந்த ‘புதிர்’ குறியீடு மிக முக்கியமானதாகப் படுகிறது எனக்கு ...இது மழையும் மனைவியும் ஆழம் அறிய இயலாப் புதிர்தானே :))